ருசிக்கு வயது 106-மஸ்தானம்மா


ருசிக்கு வயது 106-மஸ்தானம்மா
x
தினத்தந்தி 7 May 2017 6:44 AM GMT (Updated: 2017-05-07T12:13:48+05:30)

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 106 வயது மூதாட்டி மஸ்தானம்மா. தள்ளாத வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்கிறார்.

ந்திர மாநிலத்தை சேர்ந்த 106 வயது மூதாட்டி மஸ்தானம்மா. தள்ளாத வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்கிறார். வீட்டு வேலைகளை சுறுசுறுப்புடன் செய்வதோடு ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவுகளை சமைத்து அசத்துகிறார். இவருடைய கைப்பக்குவம் வீட்டினரை மட்டுமல்ல இணையதள சமையல் பிரியர்களையும் கவர்ந்திருக்கிறது. தன்னுடைய சமையல் கைப்பக்குவத்தை செய்முறையுடன் வீடியோவாக யூடியூப்பில் உலவ விட்டிருக்கிறார். இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் மஸ்தானம்மாவின் சமையல் வீடியோ பதிவுகளை பின்தொடருகிறார்கள். பாரம்பரிய உணவுகள், மீன் வறுவல் முதல் சிக்கன் பிரியாணி வரை மஸ்தானம்மாவின் கைவண்ணத்தில் கமகமக்கிறது. இவருடைய பேரன் லட்சுமணன் சமையல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

லட்சுமணன் ஒருநாள் இரவு நண்பர்களுடன் சேர்ந்து சமைத்ததை யூடியூப்பில் பதிவு செய்திருக்கிறார். அது வைரலாக இணையத்தில் பரவி இருக்கிறது. அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் சிறுவயது முதலிலேயே தன்னுடைய பாட்டி அற்புதமாக சமைத்து வருவது சட்டென்று நினைவுக்கு வந்திருக்கிறது. உடனே பாட்டி சமைப்பதை வீடியோ எடுத்து செய்முறையுடன் பதிவிட தொடங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் தனது பேரன் தான் சமைப்பதை படம் பிடித்து என்ன செய்கிறான் என புரியாமல் குழம்பி போயிருக்கிறார். விவரம் தெரிந்த பிறகு பேரனுடைய செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்.

“ஒருநாள் இரவு நண்பர்களுடன் சேர்ந்து சமைத்தேன். அதனை வீடியோவாக பதிவு செய்து யூடியூப்பில் போட்டோம். அந்த வீடியோ வைரலாக பரவியதால் அதை மேலும் பிரபலப்படுத்த முடிவெடுத்தேன். பாரம்பரிய உணவு வகைகள் பற்றியும், அதை எப்படி சமைப்பது என்பது பற்றியும் பாட்டியிடம் கேட்டு அவர் சமைப்பதை வீடியோவாக படம் பிடித்தேன். ஆரம்பத்தில் நான் என்ன செய்கிறேன் என்பது அவருக்கு புரியவில்லை. பின்னர் இணையதளத்தில் பதிவிடுவதையும், அதனை ஏராளமானவர்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்பதையும் அறிந்தவர் தன்னுடைய சமையல் அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள தொடங்கினார்” என்கிறார்.

ஆந்திர மாநிலத்திலுள்ள குடிவாடா என்ற பகுதியை சேர்ந்த மஸ்தானம்மா, சமீபத்தில் தனது 106-வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அதனையும் வீடியோவாக இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். அதில் தன்னுடைய சமையல் ஆர்வம் பற்றியும், தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் மீதான பாசம் பற்றியும் விவரித்துள்ளார். மஸ்தானம்மா மீன் வகைகள் மற்றும் பிற கடல்வாழ் உணவுகளை ருசியாக சமைப்பதில் கைதேர்ந்தவர். அவரது சமையல் பக்குவத்தை ஊர் மக்களும் ருசித்து மகிழ்கிறார்கள். 

Next Story