மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மஞ்சுவிரட்டு, பால்குட ஊர்வலம் நடைபெற்றது
திருப்பத்தூர் அருகே மகிபான்பட்டியில் உள்ள பூங்குன்றநாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, மஞ்சுவிரட்டு
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் பிரசித்தி பெற்ற பூங்குன்றநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடடுவது வழக்கம். இந்த கோவில் திருவிழாவின் தொடக்க நாளாக மஞ்சுவிரட்டு நடைபெறும். இந்த மஞ்சுவிரட்டு மிகவும் கட்டுப்பாடுகளுடன் தொழுவத்தில் வைத்து மட்டுமே அவிழ்த்து விடப்படும்.
இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான கோவில் திருவிழா நேற்று முன்தினம் மஞ்சுவிரட்டு போட்டியுடன் தொடங்கியது. திருவிழாயொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டு, மஞ்சுவிரட்டு தொழுவம் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை, ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் அடக்கினர். ஒருசில காளைகள் பிடிபட்டும், ஏராளமான காளைகள் தப்பித்தும் சென்றன. போட்டி முடிவில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பால்குட ஊர்வலம்இதனைத்தொடர்ந்து திருவிழாவில் நேற்று பூங்குன்றநாயகி அம்மனுக்கு காலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம் எடுத்தும், பூத்தட்டு எடுத்தும் அதிகாலை 5 மணிக்கு பூக்கொட்டகையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து மதியம் பெண்கள் பொங்கல் வைத்தும், மகிபாலன்பட்டி கிராமத்தினர் கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் இன்று(12–ந்தேதி) காலை சாமி ரதத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.