விக்கிரவாண்டி அருகே பெட்ரோல் ‘பங்க்’ குடோனில் பயங்கர தீ விபத்து ரூ.10 லட்சம் சேதம்
விக்கிரவாண்டி அருகே பெட்ரோல் பங்க் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் பெட்ரோல் ‘பங்க்’ ஒன்று உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பெட்ரோல் பங்க்கின் பின்புறத்தில் பெரிய குடோன் உள்ளது.
அந்த குடோனில் பெட்ரோல் பங்கிற்கு சொந்தமான ஆயில் கேன்கள், ஜெனரேட்டர், காற்றடைப்பான் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.
பயங்கர தீ விபத்துஇந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகைமூட்டமாக காட்சியளித்தது.
குடோன் தீப்பற்றி எரிவதை பார்த்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி அவர்கள் விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், நிலைய அலுவலர் அமானுல்லா ஆகியோர் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ரூ.10 லட்சம் சேதம்முதல்கட்டமாக பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து, அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி குடோனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ஆயில் கேன்கள், ஆயில் பாக்கெட்டுகள், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் குடோன் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.10 லட்சமாகும்.
தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.