சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 21 மின்மோட்டார்கள் பறிமுதல்
வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 21 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சீர்காழி,
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதாக நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலெக்டர் மற்றும் தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோவன் உத்தரவின்பேரில் நாகை–திருவாரூர் மண்டல பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மோகனரங்கன் (மணல்மேடு), சிவகுமார் (தலைஞாயிறு), பாரதிதாசன் (வைத்தீஸ்வரன்கோவில்), கமலக்கண்ணன் (கீழ்வேளூர்) ஆகியோர் கொண்ட குழுவினர் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி உட்பட்ட 15 வார்டுகளிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வீடுகள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அதில் பல்வேறு வீடுகளில் சட்டவிரோதமாக குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி பயன்படுத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய 21 மின் மோட்டார்கள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இடங்களில் உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். ஆய்வின்போது பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.