விருதுநகர் அருகே பாலத்தில் கார் மோதி கணவன்–மனைவி பலி குடும்பத்துடன் கோவில் திருவிழாவுக்கு வந்தபோது பரிதாபம்
குடும்பத்துடன் கோவில் திருவிழாவுக்கு வந்தபோது பாலத்தில் கார் மோதிய விபத்தில் கணவன்–மனைவி பலியானார்கள்.
விருதுநகர்,
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் கோவை மாவட்டம் பேரூர் கலைஞர் நகரில் மளிகை கடை நடத்தி வந்தார். மனைவி ஷர்மிளா(46) மற்றும் குழந்தைகளுடன் அங்கேயே வசித்து வந்தார். சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக கணேசன் குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார். கோவையை சேர்ந்த செல்வக்குமார்(33) காரை ஓட்டினார்.
காரில் கணேசன், அவருடைய மனைவி ஷர்மிளா, மகன்கள் விக்னேஷ்(20), சதீஷ்(19), மகள்கள் சவுமியா(17), தன்ஷிகா(15) ஆகியோர் இருந்தனர். இந்த கார் நேற்று காலை 5 மணியளவில் விருதுநகர்–சாத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள மருளூத்து விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் அங்கிருந்த பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.
கணவன்–மனைவி பலிஇந்த விபத்தில் காரில் இருந்த ஷர்மிளா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கணேசன் பலத்த சிரமத்திற்கு இடையே மீட்ட நிலையில் அவரும் பரிதாபமாக இறந்தார்.
விக்னேஷ், சதீஷ், சவுமியா, தன்ஷிகா, டிரைவர் செல்வக்குமார் ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு செல்வக்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.