இலங்கை செல்ல முயன்ற 4 அகதிகள் பிடிபட்டனர் கியூ பிரிவு போலீசார் விசாரணை


இலங்கை செல்ல முயன்ற 4 அகதிகள் பிடிபட்டனர் கியூ பிரிவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 May 2017 4:30 AM IST (Updated: 12 May 2017 10:17 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை செல்ல முயன்ற 4 அகதிகள் தனுஷ்கோடி 4–வது மணல்திட்டில் பகுதியில் பிடிபட்டனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் நேற்று அதிகாலை இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து சென்றனர். அப்போது 4–வது மணல்திட்டில் 4 பேர் நின்றுகொண்டு தங்களை காப்பாற்றும்படி சைகை செய்துள்ளனர். இதனைக்கண்டதும் கடலோர காவல்படையினர் அங்கு சென்று அவர்களை பிடித்து கடலோர காவல்படை முகாமுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் இலங்கை அகதிகளான அன்பரசன் (வயது40), இவரது மனைவி சுகாசினி(36), மற்றும் குழந்தைகள் அஜந்தன்(14), நிஷாந்தினி(12) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கடந்த 1996–ம் ஆண்டு இலங்கையில் இருந்து ஒரு படகு மூலம் இந்தியாவுக்கு அகதியாக வந்து 2000–ம் ஆண்டு வரை மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்ததும், பிறகு திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள சாயந்திரி நகரில் வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரிந்தது. திருச்சியில் அன்பரசன் 2 லாரிகள் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார். தொழில் நஷ்டமடைந்ததும் வேறு வழியின்றி மண்டபம் முகாமுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அங்கு முகாம் தனித்துணை ஆட்சியரிடம் தங்களை அகதிகளாக பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார்.

அதற்கு அவர், இங்கு பதிவு செய்ய முடியாது என்று கூறியதை தொடர்ந்து முகாமில் உள்ள உறவினர் வீட்டில் யாருக்கும் தெரியாமல் குடும்பத்துடன் தங்கிஉள்ளார். பிறகு கத்தாரில் உள்ள உறவினர் மூலம் பணம் ஏற்பாடு செய்த அன்பரசன் இலங்கை செல்ல திட்டமிட்டு உள்ளார். இதன்படி அவர், குடும்பத்துடன் ராமேசுவரத்தில் இருந்து ஒரு நாட்டுப்படகில் ரூ.60,000 கொடுத்து இலங்கைக்கு செல்ல முயன்றுள்ளார்.

விசாரணை

அப்போது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்ததும் படகோட்டி இவர்களை இலங்கை எல்லைக்கு வந்துவிட்டதாக கூறி 4–வது மணல்திட்டில் இறக்கி விட்டுள்ளார். இங்கிருந்து சைகை செய்தால் இலங்கை கடற்படையினர் உங்களை காப்பாற்றி அழைத்து செல்வார்கள் என்று கூறிவிட்டு படகை எடுத்துக்கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட அகதிகளிடம் இந்திய குடியுரிமைக்கு ஆதாரமாக விளங்கும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரே‌ஷன்கார்டு, பான்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். அதனை தொடர்ந்து கடலோர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 பேரிடமும் கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story