போலீஸ் விசாரணைக்கு சென்ற தொழிலாளி மர்மசாவு 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

போலீஸ் விசாரணைக்கு சென்ற தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் அரிபிரசாத். இவரும் ஓசூரை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அரிபிரசாத் தனது நண்பரான தளி அருகே உள்ள நல்லசந்திரம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஜெயராமன் (வயது 35) என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கணவன்–மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதற்கிடையே அரிபிரசாத்தும், ஜெயராமனும் தங்களது மகளை கடத்தி சென்றுவிட்டனர் என அந்த பெண்ணின் பெற்றோர் தளி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இருவரையும் தளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போராட்டம்இதில் விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த ஜெயராமன் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து தங்கள் மகன் போலீசார் அடித்ததால் தான் இறந்துள்ளார் என புகார் தெரிவித்தனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், ஜெயராமனின் உறவினர்களும் அவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த ஜெயராமனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்றும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.
3 போலீசார் மாற்றம்பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின்பேரில் ஜெயராமனை தாக்கியதாக தளி போலீசார் பச்சமுத்து, மாதேஷ், ரஞ்சித் ஆகிய 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஓசூர் ஜே.எம்–1 மாஜிஸ்திரேட்டு கவிதா முன்னிலையில் ஜெயராமனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் உடலை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.