தனியார் குடோனில் தீ விபத்து: ரூ.1 கோடி மதிப்பிலான செருப்புகள் எரிந்து நாசம்


தனியார் குடோனில் தீ விபத்து: ரூ.1 கோடி மதிப்பிலான செருப்புகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 14 May 2017 5:00 AM IST (Updated: 13 May 2017 10:36 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் தனியார் செருப்பு கடை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே ஒரு காம்ப்ளக்சின் தரைதளத்தில் தனியார் செருப்புகடை செயல்பட்டு வருகிறது. முதல் தளத்தில் செருப்புகடையின் குடோனும், 2–வது தளத்தில் தனியார் நிதி நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. குடோனில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோனில் ரப்பர் மற்றும் விலை உயர்ந்த தோல் செருப்புகள் தீப்பற்றி எரிந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

செருப்புகள் எரிந்து நாசம்

தஞ்சையில் உள்ள குடிநீர் சப்ளை செய்யும் 3 தனியார் லாரிகள் மூலமும் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் குடோனில் இருந்த செருப்புகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதன் சேதமதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

செருப்பு கடை குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. அப்போது குடோனின் முன்பகுதியில் இருந்த கண்ணாடிகள் வெடித்து சிதறின. தீ விபத்து ஏற்பட்டதும் அந்த பகுதியில் மின்தடை செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

இந்த தீ விபத்தில் கடை ஊழியர்கள் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என உடனடியாக தெரியவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து தஞ்சை தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story