கருங்கல் போலீஸ் நிலையம் முற்றுகை; 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது


கருங்கல் போலீஸ் நிலையம் முற்றுகை; 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2017 3:45 AM IST (Updated: 14 May 2017 12:08 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கடை,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவராக இருப்பவர் எபலேசியர் ஜோயல். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கருங்கல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்தும், எபலேசியர் ஜோயலை தாக்கிய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி கருங்கல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட போவதாக அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து கருங்கல் போலீஸ் நிலையத்துக்குள் யாரும் நுழையாதபடி அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் நிலையத்துக்கு வரும் 5 சந்திப்புகளிலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே திட்டமிட்டபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நேற்று எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், மனோதங்கராஜ் தலைமையில் அரசியல் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அப்பகுதியில், ராஜீவ்காந்தி சிலை அருகே திரண்டனர். அவர்களை போலீசார் தடுப்பு வைத்து அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தினர். இதனால், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

கைது

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போலீசாரின் வேண்டுகோளை எம்.எல்.ஏ.க்கள் ஏற்க மறுத்தனர். எபலேசியர் ஜோயலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டத்தை தொடருவோம் என்றனர்.

இதைதொடர்ந்து தடையை மீறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதாக கூறி எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், மனோதங்கராஜ் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


Next Story