‘நீட்’ தேர்வின் போது கேரள மாணவியிடம் சோதனை நடத்தியது துரதிர்ஷ்டவசமானது மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேட்டி
‘நீட்‘ தேர்வின் போது கேரள மாணவியிடம் சோதனை நடத்தியது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
‘நீட்‘ தேர்வின் போது கேரள மாணவியிடம் சோதனை நடத்தியது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பேச்சுபெங்களூருவில் நேற்று பள்ளிக்கல்வித் துறையில் புதுமை மற்றும் சிறந்த நடைமுறைகள் என்ற பெயரில் தென் மாநில அளவிலான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நமது நாட்டில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியமானதாகும். இதற்கு முதலில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடம் கற்பித்தலில் சில ஆசிரியர்கள் புதுமையான அணுகு முறைகளை கையாண்டு வருகிறார்கள். இதுபோன்ற முறையை நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும். புதுமையான அணுகு முறையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், அந்த கற்பித்தல் முறையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அதனை மற்ற ஆசிரியர்கள் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
இதற்காக புதிய இணையதளம் அடுத்த 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளிகளில் பெற்றோர் தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்புகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் மழலையர்களுக்கான வகுப்பு இல்லாதது தான். இதனை உணர்ந்த சிக்கீம் மாநில அரசு, அந்த மாநிலத்தில் அரசு பள்ளிகளில் மழலையர்களுக்கான வகுப்புகளை தொடங்கியுள்ளது. இதுபோன்ற புதுமையான நடைமுறைகளை இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
தரமான கல்விநல்ல மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் முக்கிய நோக்கம் ஆகும். அதனால் தரமான கல்வியை வழங்குவது முக்கியமானதாகும். கல்வி என்பது அரசியல் திட்டமல்ல, அது தேசிய செயல் திட்டமாகும். அதிகார பரவலாக்கல், சுதந்திர உணர்வு போன்றவற்றை கல்வியால் மட்டுமே வழங்க முடியும். மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இனிவரும் காலங்களில் தரமற்ற கல்வியை சகித்து கொள்ள முடியாது. அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைக்க வேண்டும் என்றால், தரமான கல்வியை வழங்க வேண்டும்.
இதற்காக பள்ளிக்கல்வியில் சில சீர்திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 5–ம் மற்றும் 8–ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அதே வகுப்பில் தக்கவைக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தேர்வு வாரியங்கள் மூலம் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சியில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக புதிய சட்டமசோதா விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் கர்நாடக மந்திரி தன்வீர்சேட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
துரதிர்ஷ்டவசமானதுபின்னர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–
மருத்துவம், பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக பொது நுழைவுத்தேர்வு (‘நீட்‘) கடந்த 7–ந் தேதி நடந்தது. இந்தி, ஆங்கிலம் மற்றும் 8 மண்டல மொழிகளிலும் தேர்வு நடந்தது. ஆனால் சில மண்டல மொழிகளில் வெளியான வினாத்தாளுக்கும், இந்தி, ஆங்கில மொழி வினாத்தாளுக்கும் சில வேறுபாடுகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ.யிடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு நடந்த ‘நீட்‘ தேர்வில் சில முறைகேடுகள் நடந்தன. அதுபோன்ற முறைகேடுகளை தடுக்க தான் ‘நீட்‘ தேர்வின் போது மாணவ–மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சோதனைகளும் நடத்தப்பட்டன.
11 லட்சம் மாணவ, மாணவிகள் ‘நீட்‘ தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு எழுதிய கேரள மாணவி ஒருவரிடம் நடத்தப்பட்ட சோதனை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவியிடம் சோதனை நடத்தியது துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 4 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் பொதுத்தேர்வுகளில் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களின் பெயர்களை வெளியிடாமல், கிரேடு முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.