கர்நாடகத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் முதல்–மந்திரி சித்தராமையா பேச்சு
கர்நாடகத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை எனது தலைமையில் காங்கிரஸ் சந்தித்து வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை எனது தலைமையில் காங்கிரஸ் சந்தித்து வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
4 ஆண்டுகள் சாதனைகர்நாடகத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 5–வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் அரசின் சாதனை குறித்து சித்ரதுர்காவில் பிரமாண்ட பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட முதல்–மந்திரி சித்தராமையா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:–
வளர்ச்சிக்கு உதாரணமாக கர்நாடகத்தை...எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 5–வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கடமையாக எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்த ஒரு ஆண்டுக்குள் மற்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அனைத்து சமூகத்தினருக்கும் நியாயமான நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.
பா.ஜனதாவினர் சொல்வது போல வளர்ச்சிக்கு குஜராத் மாநிலத்தை மாதிரியாக பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. கர்நாடகமே சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் வளர்ச்சிக்கு உதாரணமாக இனிமேல் குஜராத்திற்கு பதில் கர்நாடகத்தை மாதிரியாக சொல்லலாம். கர்நாடகத்தின் மாதிரியையே அனைவரும் பின்பற்ற தொடங்குவார்கள். அடுத்த ஆண்டு (2018) நடைபெறும் தேர்தலில் கர்நாடகத்தின் வளர்ச்சி மாதிரியை மக்கள் முன்வைப்போம்.
எனது தலைமையில் சந்திக்கும்கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை எனது தலைமையில் காங்கிரஸ் சந்திக்கும். தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை அமைக்கும். ஜனநாயகத்தில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ள நான், தேர்தலை சந்திப்பது உள்ளிட்ட எந்த விஷயத்திலும் தன்னிச்சையாகவோ, ஒரு தலைபட்சமாகவோ முடிவு எடுக்க மாட்டேன். மக்களின் நம்பிக்கையை பெற்று மாநிலத்தின் வளர்ச்சியை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறோம். மக்களின் ஆசியை பெற்று மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும்.
150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூற நான் ஒன்றும் எடியூரப்பா அல்ல. மக்கள் ஆசிர்வதித்தால் தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியும். எடியூரப்பாவின் வார்த்தைக்கு மக்கள் மரியாதை கொடுப்பதில்லை. நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை இடைத்தேர்தலே இதற்கு சாட்சியாகும். மக்களுக்கு சமூகநீதி அடிப்படையிலான ஆட்சி தேவை. எனது தலைமையிலான அரசும் அதையே தான் செயல்படுத்தி வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு மீதமுள்ள காலத்தில் அரசு செயல்படும். அரசின் சாதனையை அறிந்து மக்கள் மீண்டும் காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.