கூடலூர் சீசனுக்கு சுற்றுலா பயணிகள் வருகை கூடலூர் – ஊட்டி மலைப்பாதையில் விபத்துகள் அதிகரிப்பு
கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கூடலூர் ஊட்டி மலைப்பாதையில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது.
கூடலூர்
கோடை வாசஸ்தலமாகவும் மலைகளின் ராணி எனவும் அழைக்கப்படும் நீலகிரியில் குளுகுளு சீசன் நிலவுகிறது. அடிக்கடி சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ந்த காலநிலை காணப்படுகிறது. இதனால் சமவெளி பிரதேசங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். கேரளா – கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் கூடலூர் நகரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
இந்த சாலை 3 மாநிலங்களையும் இணைக்கிறது. கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு, கோட்டயம், பெருந்தல்மன்னா, மலப்புரம் பகுதி மக்கள் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கூடலூர் வழியாக செல்லக்கூடிய முக்கிய சாலையாக உள்ளது. இதேபோல் மைசூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். மேலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கேரளாவுக்கு சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
மலைப்பாதையில் விபத்துகள் அதிகரிப்புஇதனால் மைசூர் – கூடலூர் – ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை சீசன் களை கட்டி உள்ளதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது. பெரும்பாலும் சமவெளி பிரதேசங்களை சேர்ந்த ஓட்டுனர்கள் வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து கொண்டு நீலகிரி மலைப்பாதையில் ஓட்டி வருகின்றனர். அப்போது மலைப்பாதையில் வாகனங்களை இயக்குவது குறித்து சரிவர அறிவது இல்லை.
கூடலூர் தொடங்கி நடுவட்டம் வரை சுமார் 20 கி.மீட்டர் தூரம் பள்ளத்தாக்கான மலைப்பாதையாக திகழ்கிறது. இப்பகுதியில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதேபோல் ஊட்டி தலைக்குந்தா முதல் மசினகுடிக்கு செல்லும் மலைப்பாதையும் ஆபத்தான வளைவுகளை கொண்டது.
பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளப்படுமா?இச்சாலைகளில் வாகனங்களை ஓட்டும் போது 2–வது கியரில் ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் பெரும்பாலான டிரைவர்கள் விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விடுகிறது. இல்லை எனில் பாறைகளில் மோதி நிற்கிறது. ஊட்டியில் புறப்படும் சுற்றுலா வாகனங்கள் நடுவட்டம் வரை பாதுகாப்பாக ஓட்டப்படுகிறது. அதன்பின்னர் பள்ளத்தாக்கான மலைப்பாதை என்பதால் பிரேக்கை பிடித்து கொண்டு வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் கூடலூர் வருவதற்குள் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி வருகிறது. எனவே சமவெளி பகுதியில் இருந்து வரக்கூடிய ஓட்டுனர்கள் வாகனங்களை உரிய முறையில் இயக்கி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
போக்குவரத்து போலீசார் விளக்கம்
கோடை சீசனையொட்டி கூடலூர்– ஊட்டி மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து கூடலூர் போக்குவரத்து போலீஸ் சப்– இன்பெக்டர் சத்தியன் கூறியதாவது:– மலைப்பாதையில் வாகனங்களை ஓட்டும்போது போது செல்போனில் பேசக்கூடாது. பள்ளத்தில் இருந்து மேட்டில் செல்லும் வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் உடனடியாக வழிவிட வேண்டும். இதேபோல் மேட்டில் இருந்து பள்ளத்தாக்கான சாலையில் இறங்கும் போது 2–வது கியரில் வாகனங்களை ஓட்ட வேண்டும். சமவெளி பிரதேசங்களில் இருந்து வரும் வாகன ஓட்டுனர்கள் இந்த முறையை பின்பற்றுவது இல்லை. இதனால் வாகனங்கள் எளிதில் விபத்தில் சிக்கி விடுகிறது. அதிவேகமாக வாகனங்களை இயக்குவதும் சட்டப்படி குற்றமாகும். சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் சமவெளி பிரதேசங்களை சேர்ந்த வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக நடுவட்டம் முதல் கூடலூர் வரை 30 இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் சாலையோரம் பொருத்தப்பட்டுள்ளது. இவ்விதிமுறைகளை அவர்கள் பின்பற்றினால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.