4 ஆண்டுகளில் எந்த வளர்ச்சி பணியும் நடக்கவில்லை ஊழலில் கர்நாடகம் முதலிடம் பிடித்ததே காங்கிரஸ் அரசின் மிகப்பெரிய சாதனை ஈசுவரப்பா குற்றச்சாட்டு


4 ஆண்டுகளில் எந்த வளர்ச்சி பணியும் நடக்கவில்லை ஊழலில் கர்நாடகம் முதலிடம் பிடித்ததே காங்கிரஸ் அரசின் மிகப்பெரிய சாதனை ஈசுவரப்பா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 May 2017 2:00 AM IST (Updated: 14 May 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

4 ஆண்டுகளில் மாநிலத்தில் எந்த வளர்ச்சி பணியும் நடக்கவில்லை என்றும், ஊழலில் கர்நாடகம் முதலிடம் பிடித்ததே காங்கிரஸ் அரசின் மிகப்பெரிய சாதனை என்றும் ஈசுவரப்பா குற்றம்சாட்டியுள்ளார். வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை கர்நாடகத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலை

பெங்களூரு,

4 ஆண்டுகளில் மாநிலத்தில் எந்த வளர்ச்சி பணியும் நடக்கவில்லை என்றும், ஊழலில் கர்நாடகம் முதலிடம் பிடித்ததே காங்கிரஸ் அரசின் மிகப்பெரிய சாதனை என்றும் ஈசுவரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை

கர்நாடகத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 4 ஆண்டுகள் ஆட்சியில் அரசு செய்த சாதனைகள் குறித்து சித்ரதுர்காவில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதுகுறித்து மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளை செய்து விட்டதாக முதல்–மந்திரி சித்தராமையா கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆனால் மத்திய அரசு ஒதுக்கிய வறட்சி நிவாரண நிதியை மாநில அரசு சரியாக பயன்படுத்தவில்லை.

ஊழலில் முதலிடம் பிடித்ததே...

கடந்த 4 ஆண்டுகளில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியதாக சித்தராமையா கூறுகிறார். அந்த சமுதாயத்தினரின் வளர்ச்சிக்காக எந்த நிதியையும் சரியாக செலவு செய்யவில்லை. ஏழைகள், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்காக பாடுபடுவதாக சித்தராமையா நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

ஊழல் நடப்பதில் நாட்டிலேயே கர்நாடகம் முதலிடம் பிடித்துள்ளது. இதனை நானாக சொல்லவில்லை. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் கர்நாடக மாநிலம் தான் ஊழலில் முதலிடத்தில் இருப்பது தெரியவந்தது. ஊழலில் முதலிடம் பிடித்ததே காங்கிரஸ் அரசின் மிகப்பெரிய சாதனையாகும்.

சட்டம்–ஒழுங்கு சீர்குலைவு

மணல் கொள்ளை நடப்பதை தடுக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போய் விட்டது. ஆனால் காங்கிரஸ் அரசு சாதனை புரிந்திருப்பதாக கூறி, சித்தராமையா விளம்பரப்படுத்தி வருகிறார். குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதும், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு நானே தலைமை தாங்குவேன், முதல்–மந்திரி ஆவேன் என்று சித்தராமையா கூறினார்.

தற்போது என்னை முதல்–மந்திரி ஆக்குவதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று சொல்கிறார். அவர் முதல்–மந்திரி ஆகமாட்டார் என்பது தெரிந்து விட்டது. அதனால் தான் இவ்வாறு பேசி வருகிறார். அடுத்த ஆண்டு (2018) நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.


Next Story