கள்ளக்காதலியை பிரித்ததால் ஆத்திரம்: லாரி டிரைவர் குத்திக்கொலை, என்ஜினீயர் கைது


கள்ளக்காதலியை பிரித்ததால் ஆத்திரம்: லாரி டிரைவர் குத்திக்கொலை, என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 14 May 2017 4:00 AM IST (Updated: 14 May 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலியை பிரித்ததால் ஆத்திரம் அடைந்து லாரி டிரைவரை குத்திக்கொலை செய்த வழக்கில் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளகோவில்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சொரியங்கிணற்றுப்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 37). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய அண்ணன் சுப்பிரமணி. அவருடைய மகள் சிவன்மதி(25) திருமணமாகி கணவருடன் தனது தந்தை வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சிவன்மதிக்கும், அதே பகுதியை சேர்ந்த ராக்கி (25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் கடந்த மாதம் ராக்கியுடன் தனது 2–வது குழந்தையை தூக்கிக்கொண்டு, சிவன்மதி வீட்டை விட்டு வெளியேறினார்.

கள்ளத்தொடர்பு

இதுகுறித்து சிவன்மதியின் கணவர், காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் சிவன்மதியையும், குழந்தையையும் தேடி கண்டுபிடித்து அவருடைய கணவருடன் அனுப்பிவைத்தனர்.

அதன் பிறகும் ராக்கியும், சிவன்மதியும் மீண்டும் கள்ளத்தொடர்பை வளர்த்தனர். இதை அறிந்த சிவன்மதியின் தந்தை சுப்பிரமணியும், அவருடைய தம்பி தங்கராஜும் சிவன்மதியுடன் பேசக்கூடாது என்று ராக்கியை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராக்கி, சிவன்மதியின் தந்தை, சித்தப்பாவை போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி திட்டியும், கிண்டல் அடித்தும் வந்துள்ளார்.

குத்திக்கொலை

சம்பவத்தன்று சிவன்மதியின் தந்தையை போனில் தொடர்பு கொண்ட ராக்கி, உங்களிடம் பேச வேண்டும் கச்சேரி வலசுவில் உள்ள எனது நண்பர் வீட்டுக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி, சுப்பிரமணி, தனது தம்பி தங்கராஜை அழைத்துக்கொண்டு ராக்கியின் நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அண்ணன், தம்பி இருவரும் ராக்கியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த ராக்கி, அங்கிருந்த கத்தியை எடுத்து தங்கராஜை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அங்கிருந்தவர்கள் தங்கராஜை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் ராக்கி மீது கொலை வழக்குப்பதிவு செய்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தப்பி ஓடிய ராக்கியை வெள்ளகோவில் போலீசார் கைதுசெய்தனர்.

பின்னர் அவர் காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ராக்கி என்ஜினீயரிங் படித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story