பலத்த மழை எதிரொலி: கொடைக்கானல் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்வு
பலத்த மழை எதிரொலியாக கொடைக்கானல் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
கொடைக்கானல்,
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அப்சர்வேட்டரியில் 85.6 மி.மீட்டரும், போட்கிளப்பில் 55 மி.மீட்டரும் மழை பதிவானது.
இந்த மழையின் போது நகர சாலைகள், மலைச்சாலையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் லேசான அளவில் மண் சரிவும் ஏற்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று மரக்கிளைகளை அகற்றி, மண்சரிவை சரி செய்தனர்.
3 அடி உயர்வுஇதற்கிடையே பலத்த மழை எதிரொலியாக கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது. இதனால் அணையின் மொத்த உயரமான 21 அடியில் தற்போது 7 அடி வரை தண்ணீர் உள்ளது. அதேபோல் நட்சத்திர ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. இதுதவிர வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் கொட்டுகிறது. இதில் பாம்பார் நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்தனர்.
கொடைக்கானல் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கோடைமழை பெய்ததால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு நீங்கியுள்ளது. அணைக்கு தண்ணீர் வந்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும், என்றனர்.