போலீஸ் நிலையத்தில் பஸ் பயணி சாவு: டிரைவர், கண்டக்டர் கைது
பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 58).
வி.கைகாட்டி
பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 58). இவர், தனது மனைவியுடன் நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் மாலையில் அவர்கள் ஊருக்கு திரும்பி செல்வதற்காக ஒரு அரசு பஸ்சில் வந்தனர். அப்போது பயணச்சீட்டுக்கு அதிக கட்டணம் கேட்டதாக கண்டக்டர் குமாருடன், ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து வி.கைகாட்டி அருகே உள்ள கயர்லாபாத் போலீஸ் நிலையத்திற்கு டிரைவர் முருகேசன் பஸ்சை ஓட்டிச்சென்றார். அங்கு ராஜா மீது, கண்டக்டர் குமார் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜாவை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவருடன் அவருடைய மனைவி பழனியம்மாள் இருந்தார். இதற்கிடையே அந்த அரசு பஸ் மற்ற பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
இந்நிலையில் இரவில் போலீஸ் நிலையத்தில் இருந்த ராஜாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சிறிது நேரத்திலேயே அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜாவின் மனைவி பழனியம்மாள் கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், டிரைவர் முருகேசன், கண்டக்டர் குமார் ஆகியோரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தாக்கியதால் தான் தனது கணவர் ராஜா இறந்ததாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன், குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.