மதுக்கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் கலெக்டரிடம் மனு


மதுக்கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 18 May 2017 4:15 AM IST (Updated: 18 May 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

வகுரம்பட்டியில் மதுக்கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி பகுதியில் தனியார் கட்டிடம் ஒன்றில் புதிதாக மதுக்கடையை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் அக்கட்டிடத்தின் மேற்கூரையை அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கட்டிடத்தின் உரிமையாளர் ரவிசங்கர் (வயது 32) கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வகுரம்பட்டியை சேர்ந்த ரகுமான் (35) கலைமணி (40), நபீஸ் அகமது (36) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

கலெக்டரிடம் மனு

இந்த நிலையில் நேற்று வகுரம்பட்டி பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து கலெக்டர் ஆசியா மரியத்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

எங்கள் ஊரில் மதுக்கடை தொடங்குவதற்காக வகுரம்பட்டியை சேர்ந்த சங்கர் என்பவர், அவருக்கு சொந்தமான கடையை டாஸ்மாக் நிறுவனத்திற்கு வாடகைக்கு கொடுத்தார். இது சம்பந்தமாக ஊர் பொதுமக்களாகிய நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டோம். அப்போது போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இனி இங்கு மதுக்கடை அமைக்கப்படாது என உத்தரவாதம் கொடுத்தனர். அந்த உத்தரவாதத்தை ஏற்று நாங்கள் போராட்டத்தை கைவிட்டோம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுக்கடையை திறப்பதற்காக டாஸ்மாக் ஊழியர்கள் வந்து இருந்தனர். இதை அறிந்த பொதுமக்களாகிய நாங்கள் 200–க்கும் மேற்பட்டோர் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அறவழியில் போராட்டம் நடத்தினோம். ஆனால் போலீசார் எங்களில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 3 பேரை கைது செய்துவிட்டனர்.

வழக்கை வாபஸ் பெற வேண்டும்

எனவே தாங்கள் (கலெக்டர்) பொதுமக்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறவும், குறிப்பிட்ட அந்த பகுதியில் மதுக்கடையை திறக்கவிடாமல் தடுத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.


Next Story