அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 22 May 2017 5:10 AM IST (Updated: 22 May 2017 5:10 AM IST)
t-max-icont-min-icon

கோடைக்கால விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை

கோடைக்கால விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். விடுமுறை தினம் மற்றும் விசே‌ஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும்.

தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள்.

நீண்ட வரிசையில் பக்தர்கள் கூட்டம்...

கோடைக்கால விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. விடுமுறை என்பதால் வெளி மாநிலம், பிற மாவட்டங்களை சேர்ந்த பலர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு வருகை தந்திருந்தனர்.

தமிழகத்தை சேர்ந்த பிறமாவட்ட மக்களும் வந்திருந்தனர். இதனால் கடும் வெயிலிலும் சாமி தரிசனம் செய்ய கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு அலைமோதியது.

குறிப்பாக சிறப்பு கட்டண தரிசனத்தில் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதைத்தொடர்ந்து வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். அதே போல் பொது தரிசனத்தில் பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து ¾ மணி நேரம் கழித்து சாமி தரிசனம் செய்தனர்.

கோடை வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள், பக்தர்கள் நடந்து செல்ல தரைவிரிப்புகள் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


Next Story