கடற்படை அதிகாரியின் பணி இடமாற்ற ஆணையை ரத்து செய்ய முடியாது
மும்பை கடற்படையில் கேப்டனாக பதவி வகிப்பவர் விக்ரம் சிங். இவர் சமீபத்தில் விசாகப்பட்டினத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
மும்பை
மும்பை கடற்படையில் கேப்டனாக பதவி வகிப்பவர் விக்ரம் சிங். இவர் சமீபத்தில் விசாகப்பட்டினத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், பணி இடமாற்ற ஆணையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் விக்ரம் சிங் மனு தாக்கல் செய்தார். அதில், தன்னுடைய மகன் 12–ம் வகுப்பு படித்து வருவதாகவும், ஆட்டிஸம் (மன இறுக்கம்) நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவனுக்கு மும்பையில் சிறப்பு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, பணி இடமாற்ற ஆணையை ரத்து செய்து உத்தரவிடுமாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.பி.கொலப்வாலா மற்றும் ஏம்.எம்.பதார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கேப்டன் விக்ரம் சிங் விசாகப்பட்டினத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும், அவரது குடும்பத்தினர் அடுத்த ஆண்டு ஜூலை வரை மும்பையில் உள்ள கடற்படை அதிகாரிகள் குடியிருப்பில் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக கடற்படை தரப்பு வக்கீல் வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கேப்டன் விக்ரம் சிங்கின் குடும்பத்தினருக்கு அளித்த உத்தரவாதத்தை பிரமாணப்பத்திரம் வாயிலாக வருகிற ஜூன் 8–ந் தேதி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர். அத்துடன், விக்ரம் சிங்கின் பணி இடமாற்ற ஆணையை ரத்து செய்ய மறுத்து விட்டனர்.