கூடலூரில் ஓட்டல்களில் பேப்பர் இலைகள் பயன்படுத்த தடை நகராட்சி சுகாதாரத்துறை கூட்டத்தில் அறிவிப்பு


கூடலூரில் ஓட்டல்களில் பேப்பர் இலைகள் பயன்படுத்த தடை நகராட்சி சுகாதாரத்துறை கூட்டத்தில் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 May 2017 3:45 AM IST (Updated: 31 May 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் பேப்பர் இலைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூடலூர் நகராட்சி சுகாதாரத்துறை ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூர்,

கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. அனைத்து பகுதியிலும் குப்பைகளை சேகரிக்க பொது இடத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் தொட்டிகளில் குப்பைகள் கொட்டாமல் திறந்த வெளியில் பொதுமக்கள் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்கவும் பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் விழிப்புணர்வு உண்டாக்கவும் நகராட்சி நிர்வாகம் மூலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதாரத்துறை சார்பில் வியாபாரிகள், ஓட்டல்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சுகாதாரத்துறை ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கினார். துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ், ஓட்டல்கள் சங்க தலைவர் முகமது சபி, வியாபாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணபிரதாபன், நிர்வாகிகள் அமர்கான், தாமஸ், சம்பத்குமார், அப்துல்ரசாக் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தரம் பிரித்து கொட்ட வேண்டும்

கூட்டத்தில், நகராட்சி பகுதியில் சுகாதாரத்தை பேணுவது குறித்து வியாபாரிகள், ஓட்டல்கள் சங்க நிர்வாகிகளுடன் நகராட்சி சுகாதாரத்துறையினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் சரவணன் கூறியதாவது:–

திடக்கழிவு மேலாண்மை திட்ட துணை விதிகளின்படி மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சம்பந்தப்பட்ட பொதுமக்கள் அல்லது வியாபாரிகள் தரம் பிரிக்க வேண்டும். அவ்வாறு தரம் பிரித்த குப்பைகளை பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் கொட்ட வேண்டும். இல்லை எனில் தினமும் காலை 7 மணிக்கு நகராட்சி துப்புரவு லாரிகள் இயக்கப்படுகிறது. அதில் மக்கும் குப்பைகளை கொட்டலாம். மக்காத குப்பைகளை சேகரித்து வைத்து வாரந்தோறும் புதன்கிழமை நாளில் மட்டும் நகராட்சி லாரிகளில் கொட்ட வேண்டும்.

ஓட்டல்களில் பேப்பர் இலைகளுக்கு தடை

தரம் பிரிக்காமல் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டக்கூடாது. அவ்வாறு மீறி கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். இதில் வீட்டுக்கு ரூ.50–ம், கடைகளுக்கு ரூ.100–ம் அபராதம் விதிக்கப்படும். நாளை 1–ந் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதை கண்காணிக்க நகராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதேபோல் ஓட்டல்களில் பேப்பர் இலைகள், பாலிதீன் பைகளில் உணவு பொருட்கள் வழங்க தடை விதிக்கப்படுகிறது. எனவே ஓட்டல் உரிமையாளர்கள் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும். கடைகளில் பேப்பர் இலைகள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஓட்டல்கள், வியாபாரிகள் சங்கத்தினர் நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story