ஓடும் ரெயிலில் சுகாதார ஆய்வாளர் மனைவியிடம் சங்கிலி பறிப்பு வாலிபர் கைது

அம்பத்தூர் அருகே ஓடும் ரெயிலில் சுகாதார ஆய்வாளர் மனைவியிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம் திரு.வி.க. நகர் பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் பாபு. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 45). இவர்கள், தங்கள் உறவினர்களுடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றனர்.
சுற்றுலா முடிந்து நேற்று அதிகாலை சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தனர். அங்கிருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயிலில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். ரெயில் பெட்டியில் கூட்டம் குறைவாக இருந்தது.
சங்கிலி பறிப்புமின்சார ரெயில் அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றபோது அந்த ரெயில் பெட்டியில் இருந்த ஒரு வாலிபர் திடீரென விஜயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 2¼ பவுன் சங்கிலியை பறித்து விட்டு ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வாலிபரை தேடி வந்தனர்.
வாலிபர் கைதுஇதற்கிடையில் திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக சாலையில் நடந்து சென்ற ஒரு வாலிபரை பிடித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்தனர். அதில் அவர், சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்த விஷ்ணு (22) என்பதும், ஓடும் ரெயிலில் விஜயலட்சுமியிடம் சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது.
அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது கத்தி, மது பாட்டில், கஞ்சா பொட்டலம் உள்ளிட்டவைகள் இருந்தன. இதையடுத்து விஷ்ணுவை ஆவடி ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை ஆவடி ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாராயணசாமி கைது செய்தார். விஜயலட்சுமியிடம் இருந்து பறித்த தங்க சங்கிலி மற்றும் கத்தி, மதுபாட்டில், கஞ்சா பொட்டலங்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.