மாடு, ஒட்டகங்கள் விற்பனைக்கு தடை விதிப்பு: மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மாடு, ஒட்டகங்கள் விற்பனைக்கு தடை விதிப்பு: மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2017 3:45 AM IST (Updated: 1 Jun 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து கூடலூரில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கூடலூர்,

கால்நடை சந்தைகளில் மாடுகள், ஒட்டகங்கள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இறைச்சிக்காக கால்நடைகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என்ற தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பஷீர் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் ஷீகாபுதீன், பொருளாளர் சிராஜூதீன், செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை விற்க தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மத்திய அரசுக்கு கண்டனம்

ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகமது பிலால், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சித்திக், உம்மர், பிலால், இமாம், செய்தி தொடர்பாளர் ஷாகீர் உசைன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:– தனி மனிதனின் உணவு உரிமையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தொடர்ந்து தலையிடுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் இறைச்சிக்காக கால்நடைகளை விற்க தடை விதித்துள்ளதை உடனடியாக பா.ஜ.க. அரசு திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story