கிராம வறுமை ஒழிப்பு சங்க பணத்தை கையாடல் செய்த கணக்காளர் உள்பட 4 பேர் கைது
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், வடக்குமாதவி கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்குகளை திட்ட இயக்குனர் செல்வராசு கடந்த 23–ந்தேதி ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், வடக்குமாதவி கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்குகளை திட்ட இயக்குனர் செல்வராசு கடந்த 23–ந்தேதி ஆய்வு செய்தார். அப்போது நலிவுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்கியதாக ஆவணங்களில் போலியாக பதிவு செய்து பணத்தை கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர் பார்வதி கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை அரசு கணக்கில் செலுத்தாமல் இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கணக்குகளை முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உதவி திட்ட அலுவலர் வெங்கடேசனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆய்வு செய்ததில் கணக்காளர் பார்வதி நலிவுற்றோருக்கு பணம் வழங்குவதாக போலி ஆவணங்கள் தயார் செய்து ரூ.54 ஆயிரம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதற்கு முன்னாள் கணக்காளர் சித்ரா என்பவர் உடந்தையாக இருந்ததோடு, இவர் பொது மக்களிடம் வசூல் செய்த ரூ.4,500–ஐயும் கையாடல் செய்தது தெரியவந்தது. கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர் கண்ணகி, பொருளாளர் நாகேஸ்வரி ஆகியோர் காசோலைகளில் கையெழுத்திட்டு அரசு பணத்தை கையாடல் செய்ய உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் உதவி திட்ட அலுவலர் அளித்த புகாரின் பேரில் கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர் பார்வதி, முன்னாள் கணக்காளர் சித்ரா, செயலாளர் கண்ணகி மற்றும் பொருளாளர் நாகேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.