கூத்தக்குடி, கட்டிக்குளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்


கூத்தக்குடி, கட்டிக்குளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
x
தினத்தந்தி 31 May 2017 10:00 PM GMT (Updated: 31 May 2017 7:27 PM GMT)

கூத்தக்குடி மற்றும் கட்டிக்குளம் பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 600 காளைகள் சீறிப்பாய்ந்தன.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ளது கூத்தக்குடி. இந்த கிராமத்தில் உள்ள பாண்டியன் காளி கோவில் கும்பாபிஷேகத்தை ஓட்டியும், ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்தி வெற்றிக்கண்ட மாணவ–மாணவிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை கவுரவிக்கும் வகையில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி கூத்தக்குடி கிராமத்தார்கள் மற்றும் நாட்டார்கள் கோவிலில் இருந்து வேட்டி மற்றும் மாலையுடன் காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வந்து மரியாதை செய்தனர். முன்னதாக தமிழர் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் வகையில் சிலம்பம், ஓயிலாட்டம், கும்மிப்பாட்டு, கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

400 காளைகள்

பின்னர் காலை 9 மணி அளவில் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 300–க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களை பகுதி வாரியாக சிறப்பு சீருடைகளுடன் போட்டி களத்தில் இறங்கினர். ஜல்லிக்கட்டில் மதுரை, அலங்காநல்லூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 400 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்ற காட்சிகளை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு தங்கக்காசு மற்றும் சிறப்பு பரிசுகளை தட்டிச் சென்றனர். பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவன் மற்றும் பாண்டிச்சேரி–தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரி, நிவாஸ், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

கட்டிக்குளம்

இதேபோல் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் திருவேட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல் ஜல்லிக்கட்டிற்கு அடுத்தபடியாக கட்டிக்குளம் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. போட்டிக்கு முன்னதாக காலை 8 மணிக்கு திருவேட்டை அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, கோவில் காளைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் வாடிவாசல் வழியாக காளை அவிழ்த்துவிடப்பட்டது. போட்டிகளை தமிழர் வீர விளையாட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 500 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். முடிவில் வெற்றிபெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியையொட்டி காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன.


Next Story