கோவை சித்தாபுதூரில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்; போலீஸ் தடியடி
கோவை சித்தாபுதூரில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கோவை,
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை, வேறு இடங்களில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் கோவை சித்தாபுதூர் சின்னசாமி சாலை, தனலட்சுமி நகர் மின்மயானம் எதிரில் புதிதாக மதுக்கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
நேற்று மதுக்கடை அமைப்பதற்கு தேவையான பொருட்கள் கடை பகுதியில் வந்து இறங்கியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும், மக்கள் கலை இலக்கிய அமைப்பினர், மக்கள் அதிகார அமைப்பினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடை முன்பு முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாலை மறியல்– தடியடிபின்னர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் உறுதியான பதில் கிடைத்தால் தான் கலைந்துசெல்வோம்என்று போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
அப்போது அங்கிருந்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த மூர்த்தி மற்றும் வினோத்குமார் உள்பட 5 பேரை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து வெளியேற்ற போலீசார் முயன்றனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களை சிலர் மறித்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டகாரர்களை கலைக்க முயன்றனர்.
இதையடுத்து மூர்த்தி, வினோத்குமார் உள்பட 5 பேரை வேனில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இரவு 11 மணி அளவில் பொதுமக்கள் கலைந்து சென்றதால் அங்கு நிலைமை சீரானது.