பங்காருபேட்டையில் பயங்கரம் உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி கத்தியால் குத்திக்கொலை


பங்காருபேட்டையில் பயங்கரம் உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 1 Jun 2017 1:41 AM IST (Updated: 1 Jun 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

பங்காருபேட்டையில், உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்,

பங்காருபேட்டையில், உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

குடும்பத்தகராறு

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுன் ரகீம் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சங்கரம்மா(வயது 45). இவர்களது மகள் அர்ச்சனா. நாகராஜும், சங்கரம்மாவும் அப்பகுதியில் கூலிவேலை செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.

இதனால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரம்மா தனது கணவனை விட்டு பிரிந்து தன்னுடைய மகளுடன் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா திருமஹள்ளி கிராமத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கிருந்தபடி கூலி வேலை செய்து, தனது மகளுடன் வாழ்ந்து வந்தார்.

கள்ளக்காதல்

அப்போது சங்கரம்மாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான நாகப்பா(55) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். நாளடைவில் நாகப்பா, சங்கரம்மாவின் வீட்டிற்கே சென்று அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இதைப்பார்த்த சங்கரம்மாவின் மகள் அர்ச்சனா அதிர்ச்சி அடைந்தார். அவர் தனது தாயை கண்டித்தார். இதனால் சங்கரம்மா, நாகப்பாவிடம் அடிக்கடி வீட்டிற்கு வரவேண்டாம் என்று கூறினார். மேலும் அவருடன் பழகுவதை தவிர்த்து வந்தார்.

உல்லாசத்திற்கு மறுப்பு

இதனால் சங்கரம்மா தன்னை விட்டுவிட்டு வேறொருவருடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம் என்று நாகப்பாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி சங்கரம்மாவின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் தன்னிடம் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தினார்.

இதனால் மனமுடைந்த சங்கரம்மா அங்கிருந்து தனது மகளுடன் பங்காருபேட்டை டவுன் ரகீம் காம்பவுண்ட் பகுதிக்கு வந்து தனியாக வீடு வாடகைக்கு பிடித்து தங்கி இருந்தார். இதுகுறித்து அறிந்த நாகப்பா, அங்கும் சென்று சங்கரம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் தன்னுடன் தொடர்ந்து உல்லாசத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார். அப்போது சங்கரம்மா உல்லாசமாக இருக்க மறுத்து, நாகப்பாவை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து விரட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

கத்தியால் குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் நாகப்பா, சங்கரம்மாவை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் சங்கரம்மா மட்டும் தனியாக இருந்தார். சங்கரம்மாவை பார்த்த நாகப்பா மீண்டும் கள்ளக்காதலை தொடர வேண்டும் என்றும், தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் கூறி வற்புறுத்தினார்.

இதில் ஆத்திரம் அடைந்த சங்கரம்மா அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து விரட்டினார். அப்போது கடும் கோபமடைந்த நாகப்பா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சங்கரம்மாவை கொலை வெறியுடன் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த சங்கரம்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதையடுத்து நாகப்பா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தொழிலாளி கைது

இந்த கொலை சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து பங்காருபேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சங்கரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நாகப்பாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை, தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story