கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் பல்கலைக்கழக பக்கத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம்


கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் பல்கலைக்கழக பக்கத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம்
x
தினத்தந்தி 31 May 2017 9:53 PM GMT (Updated: 31 May 2017 9:53 PM GMT)

மும்பை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வினியோகம் நேற்று தொடங்கியது.

மும்பை,

மும்பை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. மாணவர்கள் பல்கலைக்கழக இணையதள பக்கத்தில் தங்களது விவரங்களை இன்று முதல் பதிவு செய்யலாம்.

விண்ணப்பங்கள் வினியோகம்

மராட்டியத்தில் நேற்று முன்தினம் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர தயாராகி வருகின்றனர். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. நகரில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன.

ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வமுடன் வந்து விண்ணப்ப படிவங்களை வாங்கினார்கள். வருகிற 15–ந் தேதி வரையிலும் (வேலை நாட்களில் மட்டும்) கல்லூரிகளில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும்.

இணையதள பக்கத்தில் பதிவு

மாணவர்கள் பட்டப்படிப்பிற்கு கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் முன் மும்பை பல்கலைக்கழக இணையதள பக்கத்தில் தங்கள் பெயர், கல்வி விவரங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்த விவரத்தை நகல் எடுத்து இணைத்து கொடுக்க வேண்டும்.

அந்த விண்ணப்பம் தான் கல்லூரிகளில் ஏற்றுக் கொள்ளப்படும். இதற்காக மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் பல்கலைக்கழக இணையதள பக்கத்தில் தங்கள் பெயரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என மும்பை பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

22–ந் தேதி வரை...

ஒரு மாணவர் இந்த நகலை வைத்து எத்தனை கல்லூரிகளிலும், எந்த பட்டப்படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம்.

தன்னாட்சி கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மும்பை பல்கலைக்கழகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய தேவையில்லை. மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரிகளில் வருகிற 16–ந் தேதி முதல் 22–ந் தேதி மாலை 4 மணி வரை ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story