ஆதம்பாக்கத்தில் பெண்ணின் காதை அறுத்து நகை கொள்ளை காற்றுக்காக கதவை திறந்துவைத்து தூங்கியபோது சம்பவம்
ஆதம்பாக்கத்தில் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்துவைத்து தூங்கியபோது, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர், பெண்ணின் காதை அறுத்து நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 35). டிரைவர். இவருடைய மனைவி சுலோச்சனா(31). நேற்று முன்தினம் இரவு வீட்டில் புழுக்கமாக இருந்ததால் ஏழுமலை, வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தூங்கினார்.
சுலோச்சனா, காற்றுக்காக வீட்டின் கதவை திறந்துவைத்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம வாலிபர் ஒருவர், திறந்து இருந்த ஏழுமலை வீட்டுக்குள் நைசாக புகுந்தார். அங்கு தனியாக படுத்து இருந்த சுலோச்சனாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.
காதை அறுத்து நகை கொள்ளைஇதில் திடுக்கிட்டு எழுந்த சுலோச்சனா, திருடன் திருடன் என கூச்சலிட்டார். உடனே அந்த வாலிபர், தன்னிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி சுலோச்சனா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் அவரது காதில் இருந்த 2 பவுன் தங்க கம்மலை பறிக்க முயன்றார்.
ஆனால் முடியாததால் சுலோச்சனாவின் காதை அறுத்து தங்க கம்மல்களை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்று விட்டார். காது அறுக்கப்பட்டதால் வலியால் அலறி துடித்த சுலோச்சனாவின் சத்தம் கேட்டு மாடியில் படுத்திருந்த அவருடைய கணவர் ஏழுமலை மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அவரை மீட்டு கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.