தலைமை தபால் நிலைய இரும்பு கதவை உடைத்த காட்டு யானை பொதுமக்கள் பீதி


தலைமை தபால் நிலைய இரும்பு கதவை உடைத்த காட்டு யானை பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 2 Jun 2017 3:46 AM IST (Updated: 2 Jun 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தலைமை தபால் நிலையத்தின் இரும்பு கதவை காட்டு யானை உடைத்தது. தொடரும் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

கூடலூர்,

கூடலூர் ஹெல்த்கேம்ப், கெவிப்பாரா, நடு கூடலூர் உள்ளிட்ட பகுதியில் ஒரு காட்டு யானை முகாமிட்டு வருகிறது. மேலும் குடியிருப்புகளை முற்றுகையிட்டு வாழை, பலா மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் காலையில் ஒரு காட்டெருமை ஊருக்குள் புகுந்து ஊட்டி– மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காபி தோட்டத்தில் புகுந்தது.

இதைக்கண்ட பொதுமக்கள் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடினர். தினந்தோறும் வனவிலங்குகளின் வருகையால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் தலைமை தபால் நிலையம் உள்ள வளாகத்தில் பலா மரம் உள்ளது. இம்மரத்தில் பலாக்காய்கள் காய்த்து தொங்குகிறது. இதனை தின்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு காட்டு யானை அப்பகுதிக்கு வந்தது. பின்னர் தபால் நிலைய வளாகத்துக்குள் நுழைய முயன்றது.

இரும்பு கதவை உடைத்து தள்ளியது

ஆனால் இரும்பு கதவுகள் கொண்டு அடைக்கப்பட்டு இருந்ததால் காட்டு யானையால் பலா மரம் உள்ள இடத்துக்கு செல்ல முடிய வில்லை. இதனால் தபால் நிலையத்தை சுற்றி வந்தவாறு இருந்தது. இந்த சமயத்தில் காட்டு யானை வந்து இருப்பதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை எடுத்து கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றனர். மேலும் அப்பகுதி மக்களும் பயத்தில் வீடுகளுக்குள் சென்று பதுங்கி கொண்டனர்.

இந்த சமயத்தில் தபால் நிலைய வளாகத்துக்குள் செல்வதற்காக பூட்டி வைத்திருந்த இரும்பு கதவுகளை தனது காலால் காட்டு யானை தள்ளி உடைத்தது. இதில் சுவரோடு பொருத்தப்பட்டு இருந்த இரும்பு கதவு உடைந்து விழுந்தது. பின்னர் காட்டு யானை பலா மரத்துக்கு சென்று தனது தும்பிக்கை உயரத்தில் பறிக்க முடிந்த பலாக்காய்களை பறித்து தின்றது. பின்னர் விடிய விடிய அப்பகுதியில் காட்டு யானை நின்றிருந்தது.

விரட்ட கோரிக்கை

தொடர்ந்து நடுகூடலூர் பகுதிக்கு காட்டு யானை இடம் பெயர்ந்து சென்றது. காட்டு யானையின் தொடர் அட்டகாசத்தால் கூடலூர் ஹெல்த்கேம்ப், நடுகூடலூர் பகுதி மக்கள் பீதியுடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story