ரெயிலில் பயணிகளிடம் திருடிய வாலிபருக்கு அடி, உதை
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளிடம் திருடிய வாலிபர் சிக்கினார். பயணிகள் அடித்து உதைத்து அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
மும்பை,
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளிடம் திருடிய வாலிபர் சிக்கினார். பயணிகள் அடித்து உதைத்து அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
பணப்பை மாயம்நாகர்கோவிலில் இருந்து மும்பை சி.எஸ்.டி. நோக்கி நேற்று நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலின் எஸ்–3 பெட்டியில் மும்பை கோரேகாவில் வசித்து வரும் திருநெல்வேலி மாவட்டம் மணப்படையை சேர்ந்த அருள்ராஜ் (வயது47) என்பவர் தனது மனைவியுடன் பயணம் செய்தார்.
இந்தநிலையில், ரெயில் புனே தாண்டி வந்து கொண்டிருந்த போது, அருள்ராஜ் மனைவி வைத்திருந்த பணப்பை திடீரென காணாமல் போனது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பணப்பை வைத்திருந்த மேல்படுக்கையின் எதிரே உள்ள படுக்கையில் அமர்ந்திருந்த வாலிபர் நைசாக இறங்கி சென்றார்.
வாலிபருக்கு அடி, உதைஇதனால் சந்தேகம் அடைந்த அருள்ராஜ் உள்ளிட்ட மற்ற பயணிகள் அந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தார். இதில் அந்த வாலிபர் தான் அருள்ராஜ் மனைவியின் பணப்பையை திருடி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அந்த வாலிபரை அடித்து உதைத்தனர்.
அவர் திருடிய பணப்பையில் ரூ.4 ஆயிரமும், கொலுசும் இருந்தது. இந்தநிலையில், அவர் எஸ்–1 மற்றும் எஸ்–2 பெட்டிகளிலும் பயணிகளிடம் கைவரிசை காட்டி இருந்தது தெரியவந்தது. அவர் ஒரு மடிக்கணினி மற்றும் செல்போன்கள் திருடி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த வாலிபர் பல பெயர்களில் அடையாள அட்டைகள் வைத்திருந்தார். அந்த வாலிபர் தன்னை சோலாப்பூரை சேர்ந்தவர் என்று கூறியதாக பயணிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், ரெயில் தாதர் ரெயில் நிலையம் வந்ததும் பயணிகள் அந்த வாலிபரையும், அவர் திருடி வைத்திருந்த பொருட்களையும் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.