ராமநாதபுரம் அருகே பாலத்தின் சுவரில் அரசு பஸ் மோதி விபத்து; டயர்கள் வெடித்தன
ராமநாதபுரம் அருகே அரசு பஸ் பாலத்தின் சுவரில் மோதியதில் டயர்கள் வெடித்தன.
ராமநாதபுரம்,
கமுதியில் இருந்து கும்பகோணத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு போக்குவரத்து கழக பஸ் நேற்று ஆண்டு தணிக்கைக்கு தயாராக ராமநாதபுரம் பணிமனைக்கு சென்றது. இந்த பஸ் நேற்று காலை ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
ராமநாதபுரம் அருகே கருங்குளம் பகுதியில் அமைந்துள்ள ரோடு பாலத்தில் பஸ் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரில் மோதியது. அப்போது பஸ்சின் பக்கவாட்டு பகுதி முழுவதும் சுவரில் உரசியது. இதில் டயர்கள் வெடித்தன. இதனால் பஸ்சின் இடதுபுறம் பகுதி முழுமையாக சேதமடைந்தது.
மீட்புஅப்போது பஸ் டிரைவர் சுதாரித்து பஸ்சை அதே இடத்தில் நிறுத்தியதால் பஸ் பாலத்தில் இருந்து கீழே பாய்ந்துவிடாமல் நின்றது. எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும் வகையில் ஓரமாக சென்றபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தின்போது பஸ்சில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பஸ் டெப்போ பணிமனை பணியாளர்கள் மீட்பு வாகனம் மூலம் விரைந்து வந்து சேதமடைந்து நின்ற பஸ்சை மீட்டு சென்றனர்.