இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
மிருக வதையை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக காளைகள், பசுமாடுகள், ஒட்டகம், எருமைகள் ஆகியவற்றை விற்பதற்கு மத்திய அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்அந்தவகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கினார். விழுப்புரம் தொகுதி செயலாளர் தமிழ்மாறன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் சேரன், தமிழ்மாறன், பாமரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இதில் மாவட்ட பொருளாளர் பிரின்ஸ்சோமு, செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, தொகுதி செயலாளர்கள் விடுதலைசெல்வன், வளவன், பால்வண்ணன், நகர செயலாளர்கள் இரணியன், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். முடிவில் செஞ்சி தொகுதி செயலாளர் எழில்.பாலசுந்தரம் நன்றி கூறினார்.