இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2017 4:30 AM IST (Updated: 3 Jun 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை: கடலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டனர்

கடலூர்,

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யவும், வாங்குவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்து கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யவும், வாங்குவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்தும், தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் திருமேனி, அஸ்கர்அலி, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, ஆதித்த. கரிகாலன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், துணை பொதுச்செயலாளர் ஷாநவாஸ், கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பிரியாணி சாப்பிட்டனர்

இதில் மாநில நிர்வாகிகள் குணத்தொகையன், முரளி, பாவாணன், ஸ்ரீதர், சுபாஷ், சொக்கு, முருகன், பேரறிவாளன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இறைச்சிக்காக மாடுகளை விற்க, வாங்க தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் போது சமைத்து கொண்டு வரப்பட்ட மாட்டுக்கறி பிரியாணியை கட்சி நிர்வாகிகள் சாப்பிட்டனர். மேலும் அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கும் மாட்டுக்கறி பிரியாணியை வினியோகம் செய்தனர்.


Next Story