மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக திருச்சியில் 3 இடங்களில் போராட்டம் போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக திருச்சியில் 3 இடங்களில் போராட்டம் போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jun 2017 5:00 AM IST (Updated: 3 Jun 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்பதற்கு தடை உத்தரவு பிறப்பித்த மத்திய அரசுக்கு எதிராக, திருச்சியில் 3 இடங்களில் போராட்டம் நடந்தது. தலைமை தபால் நிலையம் முன் நடந்த போராட்டத்தில் போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

திருச்சி,

இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கு எதிராக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தினமும் போராட்டம் நடந்து வருகிறது.

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை விதித்த பிரதமர் நரேந்திரமோடியின் இல்லத்திற்கு மாட்டு இறைச்சியை பார்சல் அனுப்பும் போராட்டம் நடத்தப்போவதாக மனிதநேய ஜனநாயக கட்சியினர் அறிவித்து இருந்தனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பாக நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தபால் நிலையத்தின் கேட் இழுத்து மூடப்பட்டு, அதன் முன்பாக இரும்பு குழாய்களால் ஆன தடுப்பு வேலிகள் அமைத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

போலீசாருடன் தள்ளு, முள்ளு

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மாநில பொருளாளர் ஹாரூன் ரஷித் தலைமையில், மாட்டு இறைச்சி அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் டப்பாக்களை கையில் தூக்கி பிடித்தபடி வந்தனர். அவர்களை போலீசார் தலைமை தபால் நிலைய வாசலில் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் போட்டனர். மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா உள்பட சிலர் அணிவகுத்து நின்ற போலீசாரை தள்ளிக்கொண்டு தபால் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர்.

போலீசார் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் உண்டாகி தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருச்சி திருவள்ளுவர் பஸ் நிலையம் விக்னேஷ் ஓட்டல் அருகில் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாட்டு இறைச்சியை தடை செய்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வடக்கு மாவட்ட செயலாளர் நீலவாணன் தலைமையிலும், தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் முன்னணி மாநில துணை செயலாளர் பிரபாகரன், நிர்வாகிகள் அரசு, தமிழாதன் உள்பட சிலர் திடீரென மாட்டு இறைச்சியை வாயில் கடித்து உண்ணும் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் தடுத்ததால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேபோல் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாநகர் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் மாநில துணை செயலாளர் ராஜாமணி, சுஜா அருள், காந்தி உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார்கள்.


Next Story