4 பேரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
4 பேரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கருப்பாயி அம்பலக்காரத்தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரும் அதே தெருவை சேர்ந்த சிவா, அய்யப்பன், சுந்தர் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது வண்டிக்காரத்தெருவை சேர்ந்த 2 பேர் இரும்பு கம்பிகளுடன் அங்கு வந்தனர். திடீரென அந்த 2 பேரும் இரும்பு கம்பிகளால் மதியழகன் உள்ளிட்ட 4 பேரையும் தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த மதியழகன், சிவா ஆகியோர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டதால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று திரும்பினர்.சாலை மறியல்
இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரை பெற்று கொண்ட போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பாயி அம்பலக்காரத்தெருவை சேர்ந்த பொதுமக்கள், போலீசாரை கண்டித்து தஞ்சை தொம்பன்குடிசை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த தஞ்சை கிழக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.