கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை சித்தராமையாவே அழித்து விடுவார்
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை சித்தராமையாவே அழித்துவிடுவார் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை சித்தராமையாவே அழித்துவிடுவார் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
காங்கிரசை அழித்துவிடுவார்கர்நாடக பா.ஜனதா சார்பில் ‘மோடி திருவிழா‘ என்ற பெயரில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை வெளிப்படுத்தும் கண்காட்சி மற்றும் விழா பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய திட்ட அமலாக்கம் மற்றும் புள்ளியல் துறை மந்திரி சதானந்தகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:–
கர்நாடகத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் இந்த ஆட்சியும் அந்த கட்சிக்கு பறிபோய்விடும். அதனால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாவது உறுதி. நாட்டில் காங்கிரஸ் எங்கு உள்ளது என்பதை ‘மைக்ரோஸ்கோப்‘ மூலம் தேட வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரசை முடிப்பது நானே என்று சித்தராமையா கூறுகிறார். அவரே காங்கிரஸ் கட்சியை அழித்துவிடுவார்.
காங்கிரசின் முடிவை எதிர்க்கிறோம்மேல்–சபை தலைவர் சங்கரமூர்த்தியின் நடவடிக்கை பற்றி காங்கிரஸ் கூட குறை கூறவில்லை. அவ்வாறு இருக்கும்போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வருவது ஏன்?. அவர் வெற்றிகரமாக தனது பணியை ஆற்றி வருகிறார். ஆட்சி அதிகாரத்திற்காக தாங்கள் சொல்வது போல் நடக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. நாங்கள் ஜனநாயக விரோதிகள் அல்ல. மேல்–சபையில் எங்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் அங்கேயே உட்கார்ந்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. இந்த விஷயத்தில் காங்கிரசின் முடிவை நாங்கள் எதிர்க்கிறோம்.
பா.ஜனதா அறிவு சக்தியின் மையம். உத்தரபிரதேசத்தில் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி எங்களுக்கு அறிவுரை கூறுவது வேண்டாம். நாட்டில் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது. மக்கள் பிரதிநிதிகள் ஆண்டுதோறும் மக்களுக்கு கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
மக்கள் தொடர்புநம்மை தேர்ந்தெடுத்து அனுப்பும் மக்கள் நம்முடைய செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும். இந்த திசையில் எங்கள் அனைவரையும் மக்களிடம் செல்லுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் தொடர்பு இருக்கவே இல்லை. பிரதமர் மோடி ‘மன்கிபாத்‘ மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியை செய்கிறார். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும்.
இவ்வாறு சதானந்தகவுடா பேசினார்.