கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பா.ஜனதா நிர்வாகிகள் மனு


கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பா.ஜனதா நிர்வாகிகள் மனு
x
தினத்தந்தி 3 Jun 2017 4:19 AM IST (Updated: 3 Jun 2017 4:18 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பா.ஜனதா நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், முனிரத்னா எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூரு,

கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பா.ஜனதா நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், முனிரத்னா எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவர்னரிடம் மனு

கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை பெங்களூரு ராஜ்பவனில் நேற்று பெங்களூரு மாநகர பா.ஜனதா நிர்வாகிகள் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி தலைமையில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி காங்கிரசை சேர்ந்த முனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக ஒரு மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில், “பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முனிரத்னா எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தனது தொகுதியில் உள்ள பெண்கள், பெண் கவுன்சிலர்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். அராஜகம் செய்கிறார்கள். எனவே முனிரத்னா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு உத்தரவிட வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

கவர்னரிடம் மனு கொடுத்த பிறகு பெங்களூரு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ரவுடிகள் மூலம் தாக்குதல்

பெண் கவுன்சிலர் மஞ்சுளா நாராயணசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் பலர் மீது முனிரத்னா மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கவர்னரிடம் கூறியுள்ளோம். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மற்றொருபுறம் மக்கள் பிரதிநிதிகள் மீது பட்டப்பகலில் தாக்குதல் நடக்கிறது. மாநிலத்தில் அரசு இருந்தும், இல்லாத நிலை நிலவுகிறது. முனிரத்னாவின் தொகுதியில் யாரும் அவருக்கு எதிராக பேசக்கூடாது, வளர்ச்சி பணிகளில் குறை இருப்பதை சுட்டிக்காட்டக்கூடாது. அவ்வாறு செய்தால் அத்தகையவர்கள் மீது ரவுடிகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது. முனிரத்னாவுக்கு மாநில அரசு கடிவாளம் போடாவிட்டால் பா.ஜனதா தீவிர போராட்டம் நடத்தும்.

இவ்வாறு பத்மநாபரெட்டி கூறினார்.


Next Story