மும்பையில் பெண்களே நிர்வகிக்கும் ரெயில் நிலையமாகிறது மாட்டுங்கா
மும்பையில் மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள மாட்டுங்கா ரெயில் நிலையம், பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் ரெயில் நிலையமாக மாற உள்ளது.
மும்பை,
மும்பையில் மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள மாட்டுங்கா ரெயில் நிலையம், பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் ரெயில் நிலையமாக மாற உள்ளது.
மாட்டுங்கா ரெயில் நிலையம்மும்பையில் மத்திய ரெயில்வே சார்பில் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு நீண்ட தூர ரெயில் சேவைகளும், மெயின், துறைமுக மற்றும் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடங்களில் புறநகர் மின்சார ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
மெயின் வழித்தடத்தில் சி.எஸ்.டி. முதல் கல்யாண் வரையிலும் 26 ரெயில் நிலையங்கள் மத்திய ரெயில்வேயால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
மெயின் வழித்தடத்தில் சி.எஸ்.டி.யில் இருந்து தாதருக்கு அடுத்தபடியாக 9–வது ரெயில் நிலையமாக அமைந்து இருக்கிறது மாட்டுங்கா ரெயில் நிலையம்.
பெண் நிர்வகிக்கும் நிலையமாக...மாட்டுங்கா ரெயில் நிலையத்தில் ஸ்லோ மின்சார ரெயில் சேவையே பிரதான ரெயில் சேவையாக இருக்கிறது. அவ்வப்போது விரைவு மின்சார ரெயிலும் நின்று செல்லும். இந்த ரெயில் நிலையத்திற்கு தினசரி ஆயிரகணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
சி.எஸ்.டி. மற்றும் தாதரில் இருந்து மராட்டியத்தின் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நீண்ட தூர ரெயில்கள் மாட்டுங்கா ரெயில் நிலையத்தை கடந்து தான் செல்ல வேண்டும். மும்பையின் பிரதான ரெயில் நிலையங்களில் ஒன்றான மாட்டுங்கா ரெயில் நிலையத்தை முழுக்க, முழுக்க பெண்களே நிர்வகிக்கும் ரெயில் நிலையமாக மாற்ற மத்திய ரெயில்வே முடிவு செய்து இருக்கிறது.
30–க்கும் மேற்பட்ட பெண்கள்இதன்படி ரெயில் நிலைய நிர்வாக பணிகளில் மேலாளர் உள்பட நிர்வாக பணிகளில் பெண்களே ஈடுபட இருக்கிறார்கள். 7 பெண் டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயில் பயணிகள் உரிய டிக்கெட் எடுத்து பயணிக்கிறார்களான என சோதனையிடுவார்கள்.
5 ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் இருப்பார்கள். 11 பேர் புறநகர் மின்சார ரெயில்களுக்கான டிக்கெட்டுகளை வினியோகம் செய்வார்கள். இதுதவிர மொத்தம் 30–க்கும் மேற்பட்ட பெண்கள் மாட்டுங்கா ரெயில் நிலையத்தில் நிர்வாக பணிகளை செய்வார்கள் என்று மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சோதனை முயற்சிஇதை மத்திய ரெயில்வே பொது மேலாளர் டி.கே. சர்மா உறுதிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:–
மாட்டுங்கா ரெயில் நிலையத்தில் திறமைவாய்ந்த பெண் ஊழியர்கள் பணி செய்கிறார்கள். பயணிகள் முன்பதிவு மையங்கள், புறநகர் மின்சார ரெயில்களுக்கான டிக்கெட் வழங்கும் பணிகளை அவர்கள் திறம்பட செய்து வருகிறார்கள். அவர்களின் திறமையான பணியை கருத்தில் கொண்டே ஒட்டு மொத்தமாக மாட்டுங்கா ரெயில் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பெண்களிடமே ஒப்படைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஒரு வாரத்தில் மாட்டுங்கா ரெயில் நிலையம் முழுக்க, முழுக்க பெண்கள் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்படும்.
இது ஒரு சோதனை முயற்சி. இந்த சோதனை வெற்றி பெற்றால் மேலும் பல ரெயில் நிலையங்கள் பெண்கள் நிர்வகிக்கும் ரெயில் நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் முறை அல்லமத்திய ரெயில்வே பெண்கள் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது இது முதல் முறை அல்ல. கடந்த 1992–ம் ஆண்டு மத்திய ரெயில்வேயில் ஊழியராக இருந்த மம்தா குல்கர்ணி என்ற பெண்ணை குர்லா ஸ்டேஷன் மாஸ்டராக பணி அமர்த்தியது.
மம்தா குல்கர்ணி தான் மும்பையின் முதல் பெண் ஸ்டேஷன் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.