ஈரோடு–திருச்சி ரெயில் பாதை விரைவில் மின்மயமாக்கப்படும்
ஈரோடு–திருச்சி ரெயில்பாதை விரைவில் மின்மயமாக்கப்படும் என்று சேலத்தில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோகிரி தெரிவித்தார்.
சூரமங்கலம்,
சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் பழமைவாய்ந்த நீராவி ரெயில் என்ஜின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நீராவி ரெயில் என்ஜின் கடந்த 2010–ம் ஆண்டு திருத்துறைபூண்டி–திருவாரூர் இடையே ஓடியது. இதை பொதுமக்கள் பார்வைக்காக நேற்று தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோகிரி திறந்து வைத்தார். பின்னர் அவர் நீராவி ரெயில் என்ஜினை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து வசிஷ்ட ஜோகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சேலம் ரெயில்வே கோட்டத்தில் பயணிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தின் முகப்பு தோற்றம் விரிவாக்கப்பட்டு புதுமையான முறையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி வருகிற டிசம்பர் மாதம் தொடங்கப்படுகிறது.
மின்மயமாக்கப்படும்ஈரோடு–திருச்சி இடையிலான ரெயில் பாதை விரைவில் மின்மயமாக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை ரெயில்வே நிர்வாகம் வழங்கி உள்ளது. இந்த பணி தனியார் நிறுவனங்களின் நிதி மூலம் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட ரெயிலில் முன்பதிவு செய்தால் அந்த ரெயிலில் இடம் இல்லை என்றால் அடுத்து வரும் ரெயிலில் பயணிக்கு இடம் ஒதுக்கும் வசதி உள்ளது. ஆனால் இந்த திட்டத்தை சேலம் கோட்டத்தில் அமல்படுத்த வாய்ப்பு இல்லை. ஏனென்றால் சேலம் கோட்டத்தில் அடுத்தடுத்து ரெயில்கள் கிடையாது.
கோடைக்கால சிறப்பு ரெயில்களுக்கு பயணிகளிடையே போதுமான வரவேற்பு இல்லை என்பதால் அவை நிறுத்தப்பட்டன. பயணிகளுக்கு நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் 3 இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இந்த மாத இறுதியில் முடிவடையும். இதைத்தொடர்ந்து ரெயில்வே வசம் கிடைத்ததும், அடுத்த மாதம்(ஜூலை) தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி ஒதுக்கினால் கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
புதிய நீரேற்று நிலையம்நாடு முழுவதும் 23 ரெயில் நிலையங்களை பராமரிப்பு பணிக்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரை சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் பாலக்காடு ரெயில் நிலையம் ஆகியவை பராமரிப்பு பணிக்காக தனியாருக்கு விடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் உள்பட சில ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சேலம், கோவை ரெயில் நிலையங்கள் ஒப்படைக்கப்படவில்லை.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஈரோடு ரெயில் நிலையத்தில்தான் ரெயில்களுக்கு தண்ணீர் நிரப்பப்படும். காவிரி ஆறு வறண்டதால் நீர் எடுக்கும் பணி பாதிக்கப்பட்டது. தற்போது காவிரி ஆற்றில் புதிய நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு ரெயில்களுக்கு தண்ணீர் நிரப்பப்படும். நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டதால் 20 ஆண்டுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, முதுநிலை கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜூவின், கோட்ட வணிக மேலாளர் மது, கோட்ட எந்திரவியல் பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.