விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க முடிவு முதற்கட்ட ஆய்வு பணிகள் தொடங்கியது


விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க முடிவு முதற்கட்ட ஆய்வு பணிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 4 Jun 2017 4:30 AM IST (Updated: 4 Jun 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

கரூர் சின்னஆண்டான் கோவில் பிரிவு ரோட்டில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் தொடங்கியது.

கரூர்,

கரூர் சின்னஆண்டான் கோவில் ரோட்டில் இருந்து பெரிய ஆண்டான்கோவில் பகுதி, கருப்பம்பாளையம், அப்புபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல வேண்டுமானால் சேலம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டும். இந்த சாலை சின்னஆண்டான் கோவில் பிரிவு ரோடு என அழைக்கப்படுகிறது.

இந்த பகுதியில் சாலையை பொதுமக்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து சென்று கடக்கும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் சின்னஆண்டான் கோவில் பிரிவு ரோட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பிரதிநிதிகளிடமும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்திருந்தனர்.

சிக்னல் கம்பங்கள்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கரூர் வந்தபோது சின்னஆண்டான் கோவில் பிரிவு ரோட்டை பார்வையிட்டார். அப்போது பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சின்னஆண்டான் கோவில் பிரிவு ரோட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக முதற்கட்ட ஆய்வு பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி அந்த இடத்தில் சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரு புறமும் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் சற்று கவனமாக வரும் படி அறிவுறுத்தும் வகையில் சிக்னல் கம்பத்தில் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேம்பாலம்

மேலும் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்லும்படி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலையில் கரூர் பகுதியில் செம்மடை, வீரராக்கியம், மண்மங்கலம், சின்னஆண்டான் கோவில் பிரிவு ரோடு, கோடங்கிப்பட்டி உள்பட 7 இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. மேற்கண்ட இடங்களில் வாகனங்கள் கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

எண்ணிக்கை

இதையடுத்து அந்த சாலைகளில் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் கடந்து செல்கிறது, கடந்த 5 வருடங்களில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை, அதில் பலியானவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது உள்ள நிலைமை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து கணக்கிட்டு பணிகள் நடந்து வருகிறது. சின்னஆண்டான் கோவில் பிரிவு ரோட்டில் வாகனங்கள் கடந்து செல்வதை கண்டறிய நவீன கருவி சிக்னல் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னல் கம்பத்தை வாகனங்கள் கடந்து செல்லும்போது அதில் பதிவாகும்.

இதன் அடிப்படையிலும், விபத்துகள் புள்ளி விவர அடிப்படையிலும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முதற்கட்டமாக ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணிகள் முடிந்ததும் அறிக்கை அளித்த பின் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சின்னஆண்டான் கோவில் பிரிவு ரோட்டில் ஆய்வு பணிகள் மேற்கொண்டு இருந்தபோது அங்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் முருகானந்தம், நகர தலைவர் செல்வன், இளைஞர் அணி செயலாளர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். மேம்பாலம் அமைப்பதற்காக ஆய்வு பணிகளை தொடங்கியதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பா.ஜ.க.வினருக்கும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.


Related Tags :
Next Story