ராதாபுரம் அருகே காணாமல் போன பெண் காட்டுப் பகுதியில் பிணமாக கிடந்தார் போலீசார் விசாரணை
ராதாபுரம் அருகே காணாமல் போன பெண், காட்டுப் பகுதியில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராதாபுரம்,
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவருடைய மனைவி சாரதா(வயது 37). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணம் முடிந்து 8 வருடங்கள் ஆன நிலையில், சாரதாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முத்துக்கிருஷ்ணன் தனது மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் 11–ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சாரதா பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாரதாவை தேடி வந்தனர்.
காட்டு பகுதியில் பிணமாக கிடந்தார்இந்த நிலையில் நேற்று முன்தினம் ராதாபுரம் அருகே சுண்டவிளையில் உள்ள காட்டு பகுதியில் ஒரு பெண் பிணமாக கிடப்பதாக களக்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்ததில், பிணமாக கிடந்தவர் சாரதா என தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாரதாவுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது சாவு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.