நோயாளியின் காலை பிடித்து மனைவி இழுத்துச்சென்ற சம்பவம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
நோயாளியின் காலை பிடித்து மனைவி இழுத்துச்சென்ற சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரு,
நோயாளியின் காலை பிடித்து மனைவி இழுத்துச்சென்ற சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவுசிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் நடக்க முடியாத நிலையில் இருந்த நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காததால், அவரின் காலை பிடித்து மனைவி தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பணியில் அலட்சியமாக இருந்ததாக 4 நர்சுகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மைசூருவில் நடந்த அரசின் பல்வேறு சலுகைகள், திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்–மந்திரி சித்தராமையா மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்திற்கு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் வந்திறங்கினார். அவரிடம் சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அதற்கு பதில் அளித்த அவர், ‘சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை வந்த பிறகு, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.
எடியூரப்பாவின் கனவு பலிக்காதுதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
எடியூரப்பா அடுத்த ஆண்டு (2018) நடக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்–மந்திரி ஆகிவிடலாம் என கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது.
மழை வேண்டி மாநில நீர்ப்பாசனத் துறை சார்பில் சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு நடத்துவது பற்றி என்னிடம் நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். அது அவர்களது நம்பிக்கை. அதில் நான் தலையிடமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.