குறிஞ்சிப்பாடி அருகே தீ விபத்து: 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
குறிஞ்சிப்பாடி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பூதம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் குமார், கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடிசை வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் இவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமார் தனது குடும்பத்தினருடன் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குடிசை மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவி அருகில் வசித்து வந்த காந்தா என்பவரின் குடிசை வீட்டுக்கும், அருகில் இருந்த வைக்கோல் போருக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
குடிசைகள் சாம்பல்இதுகுறித்து அப்பகுதி மக்கள் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிவேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 குடிசை வீடுகள் மற்றும் வைக்கோல் போரில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகளும், வைக்கோல் போரும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
மேலும் குமார், காந்தா ஆகியோரது வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, துணிமணிகள், மின்சாதன பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றவை தீயில் எரிந்து சேதமானது. இதன் சேத மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.