சேலத்தில் 8 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது


சேலத்தில் 8 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது
x
தினத்தந்தி 4 Jun 2017 4:51 AM IST (Updated: 4 Jun 2017 4:51 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தான் வேலை பார்த்த வீட்டில் 8 பவுன் நகையை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் ராமகிருஷ்ணா பார்க் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சையத் அபுதாகீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது சவுதி அரேபியாவில் வேலை செய்கிறார். இவருடைய மனைவி பைத்துல் சுதா (வயது 48). இவர்களுடைய மகள் அப்மிதா சேலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.

சையத் அபுதாகீர் வீட்டில் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி ஜானகி (38) வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜானகியிடம் வீட்டை சுத்தம்செய்யுமாறு கூறிவிட்டு, பைத்துல் சுதா குளிக்க சென்றார். பின்னர் அவர் குளித்துவிட்டு வந்து பார்த்தபோது டி.வியின் கீழே வைத்திருந்த 8 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரியவந்தது. ஜானகியும் அங்கு இல்லை. இதனால் பைத்துல் சுதா அதிர்ச்சி அடைந்தார்.

வேலைக்கார பெண் கைது

இதுகுறித்து பைத்துல்சுதா அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் ராமகிருஷ்ணா பஸ்நிறுத்தம் அருகே ரோந்து மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அந்த பெண் ஜானகி என்பதும், பைத்துல் சுதா வீட்டில் 8 பவுன் நகையை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 8 பவுன் நகையை மீட்டனர். இதைத்தொடர்ந்து ஜானகியை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் போலீசார் அடைத்தனர்.



Next Story