ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஓட்டேரி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்,
ஓட்டேரி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்வேலூரை அடுத்த விருப்பாட்சிபுரம் 34–வது வார்டு நம்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை ஓட்டேரி பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வேலூர் தாசில்தார் பழனி மற்றும் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் அவர்களிடம் கூறியதாவது:–
நாங்கள் நம்பிராஜபுரத்தில் சுமார் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 1981–ம் ஆண்டு அரசு எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியது. இங்கு 150 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் 2 ஜல்லிக்கற்கள் உடைக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவர்கள் பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நாங்கள் பல இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளோம். எங்கள் இடம் அருகே உள்ள தனிநபர் ஒருவரின் பட்டா நிலத்தை பொது பாதையாக பயன்படுத்தி வந்தோம். தற்போது அவரும் பொதுமக்கள் அந்த பாதையில் செல்ல அனுமதிக்க மறுக்கிறார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்இதனால் போக்குவரத்துக்கு பாதை இல்லாமல் இருக்கிறோம். முக்கியமாக சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாலும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலும் சுற்றித் தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து தாசில்தார் பழனி அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார். மேலும் பொதுமக்களிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.