குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரமற்று காணப்படும் மானாமதுரை ரெயில் நிலையம்


குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரமற்று காணப்படும் மானாமதுரை ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:00 AM IST (Updated: 5 Jun 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரமற்று காணப்படும் மானாமதுரை ரெயில் நிலையம் அடிப்படை வசதிகளும் இல்லை

மானாமதுரை,

மானாமதுரை ரெயில் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரமற்றும், அடிப்படை வசதிகள் இன்றியும் உள்ளது. இதனால் ரெயில் நிலையம் வரும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ரெயில் நிலையம்

மதுரை ரெயில்வே கோட்டத்தில் முக்கிய ரெயில் நிலையமாக மானாமதுரை ரெயில் நிலையம் இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரத்திற்கு ரெயில் மார்க்கமாக செல்ல வேண்டும் என்றால் மானாமதுரை ரெயில் நிலையம் வந்து, அதன்பிறகே ராமேசுவரம் செல்ல முடியும். இதனால் மானாமதுரை வழியாக தினசரி 10–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. ஆனால் தற்போது மானாமதுரை ரெயில் நிலையத்தை எந்த ரெயில்வே அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் ஒரு பக்கம் குப்பைகள் குவிந்து சுகாதாரம் இன்றியும், மறுமக்கம் முதல் நடைமேடையில் உள்ள பயணிகள் கழிப்பறை மூடப்பட்டும், குடிநீர் குழாய்கள் தண்ணீர் இல்லாமல் காட்சி பொருளாகவும் உள்ளன. இதனால் மானாமதுரை ரெயில் நிலையம் வரும் பயணிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.

குப்பைகள்

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ரெயில் நிலையத்தில் சுகாதார பணிகளை ரெயில்வே நிர்வாகம் நிறுத்திவிட்டன. மேலும் இங்கு பணியாற்றிய சுகாதார பணியாளர்களை கூண்டோடு மாற்றம் செய்து, மதுரை ரெயில்வே கோட்டத்திற்கு அனுப்பிவிட்டனர். இதனால் மானாமதுரை ரெயில் நிலையத்தில் குப்பைகள் அள்ளப்படாததால் நடைமேடை, தண்டவாளம் என எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனை எந்தவொரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன்வராமல் அதனை கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது குப்பைகளால் ரெயில் நிலையம் வரும் பயணிகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லை

இதேபோல் மானாமதுரை ரெயில் நிலையத்தில் ஒரேயொரு பயணிகள் கழிப்பறை இருந்தது. அதனையும் தற்போது பூட்டுப்போட்டு மூடிவிட்டனர். இதனால் பெண்கள், முதியோர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக காலையில் இயக்க படும் விருதுநகர், திருச்சி டொமோ ரெயிலில் கழிப்பறை வசதிகள் கிடையாது என்பதால், அதில் பயணம் செய்யும் பயணிகள் ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால் மானாமதுரை ரெயில் நிலையத்தில் கழிப்பறை மூடப்பட்டதால் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

இதுதொடர்பாக ரெயில் நிர்வாக அதிகாரிகள் சிலர் கூறும்போது, சுத்தமாக வருமானம் இல்லாமல் இருப்பதால் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இதனாலேயே ரெயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக கூறினார்.

எனவே மானாமதுரை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவு செய்ய வேண்டும், ரெயில் நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story