ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் நெல்லை எக்ஸ்பிரஸ் தப்பியது


ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் நெல்லை எக்ஸ்பிரஸ் தப்பியது
x
தினத்தந்தி 5 Jun 2017 3:30 AM IST (Updated: 5 Jun 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் நேற்று அதிகாலை ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.

திண்டுக்கல்,

சென்னையில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 4.15 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது. பின்னர் 4.20 மணிக்கு அந்த ரெயில் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது. திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே உள்ள வேடப்பட்டி ஒத்தக்கண் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் எழுந்தது.

இதுபற்றி ரெயில் என்ஜின் டிரைவர், திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த ரெயில், அந்த இடத்தை கடந்து சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் வேடப்பட்டி ஒத்தக்கண் பாலத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

மேலும் தென்மாவட்டங்களுக்கு ரெயில்கள் அதிகமாக செல்லும் நேரம் என்பதால், தண்டவாளத்தை தற்காலிகமாக சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நெல்லை எக்ஸ்பிரஸ் தப்பியது

இதற்கிடையே சென்னை–செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை–மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், கச்சக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை திண்டுக்கல்லுக்கு வந்தன. தண்டவாளத்தை சரிசெய்யும் பணி நடந்ததால், அவை திண்டுக்கல் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. இதையடுத்து தண்டவாளம் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது.

அதன்பின்னர் 3 ரெயில்களும் 20 கி.மீ. வேகத்தில் அந்த வழியாக இயக்கப்பட்டன. பின்னர் தென்மாவட்ட ரெயில்கள் அனைத்தும் சென்று விட்ட நிலையில், காலை 9 மணிக்கு மீண்டும் தண்டவாளத்தை சரிசெய்யும் பணி தொடங்கியது. 3 மணி நேரத்துக்கு பின்னர் தண்டவாளம் சரிசெய்யப்பட்டு, ரெயில்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.

மேலும் தண்டவாளத்தில் எழுந்த சத்தத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் டிரைவர் கண்டுபிடித்து, உடனடியாக தெரிவித்ததால் பின்னால் வந்த ரெயில்கள் விபத்தில் சிக்கவில்லை. விரிசல் ஏற்பட்ட இடம், திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் அருகே உள்ளது. இதனால் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் குறைந்த வேகத்தில் சென்றதால், விபத்தில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.


Next Story