புதுவை–கன்னியாகுமரி ரெயிலை தினசரி இயக்க வேண்டும் முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம், ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை


புதுவை–கன்னியாகுமரி ரெயிலை தினசரி இயக்க வேண்டும் முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம், ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Jun 2017 3:45 AM IST (Updated: 5 Jun 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

புதுவை–கன்னியாகுமரி ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம், புதுவை ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை–கன்னியாகுமரி ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம், புதுவை ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி ரெயில் பயணிகள் சங்க தலைவர் சாமி, செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

தினசரி இயக்க வேண்டும்

புதுவை–கடலூரை இணைக்கும் வகையில் புதிய ரெயில் பாதை அமைத்தால் புதுவையில் இருந்து தென்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆன்மிக நகரங்களுக்கும் நேரடி ரெயில் சேவை தொடங்க வசதியாக இருக்கும். தற்போது இந்திய புதிய ரெயில்பாதை திட்டத்திற்கு ரெயில்வே போர்டு அனுமதி அளித்துள்ளது குறித்து முதல்–அமைச்சர் அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து திண்டிவனம் வழியாக புதுவைக்கு புதிய ரெயில்பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதுச்சேரி–திண்டிவனம் ரெயில் பாதை அமைத்தால் புதுவையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களின் நேரம் குறையும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட புதுவை–கன்னியாகுமரி ரெயில் வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனை விருத்தாசலம், திருச்சி, மதுரை வழியாக தினமும் இயக்க வேண்டும். அந்த ரெயில் தற்போது நண்பகல் 11.25 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இதனை மாலை நேரத்தில் இயக்க வேண்டும்.

புதிய ரெயில்கள் விட வேண்டும்

இரட்டை ரெயில்பாதை திட்டப்பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. எனவே புதுவையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, திருச்செந்தூர், கோயம்புத்தூர், செங்கோட்டை போன்ற ஊர்களுக்கு புதிய ரெயில் விடவேண்டும். புதுவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான விழுப்புரம்–மதுரை ரெயிலை புதுவை வரை நீட்டிக்க வேண்டும். புதுச்சேரியில் இருந்து வாரம் ஒருமுறை இயக்கப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரத்தில் 3 நாட்கள் இயக்க வேண்டும்.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு தினசரி மாலை நேரத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கினால் புதுவை மக்களுக்கு வசதியாக இருக்கும். விழுப்புரம் மேம்பால பணிகள் நடைபெறுவதால் புதுவையில் இருந்து விழுப்புரம் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே புதுவையில் இருந்து விழுப்புரத்திற்கு கூடுதலாக பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story