முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டின் கதவை உடைத்து 42 பவுன் நகை- ரூ.22 ஆயிரம் கொள்ளை


முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டின் கதவை உடைத்து 42 பவுன் நகை- ரூ.22 ஆயிரம் கொள்ளை
x
தினத்தந்தி 5 Jun 2017 4:30 AM IST (Updated: 5 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவிலில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டின் கதவை உடைத்து 42 பவுன்-ரூ.22 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செம்பனார்கோவில்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோவில் நல்லாடை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது65). பூம்புகார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர். கடந்த 2 நாட்களுக்கு முன் ரெங்கநாதன், வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சென்னைக்கு சென்று தனது பேரன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சென்னையில் இருந்து நேற்று காலை ரெங்கநாதன் தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கொள்ளைப்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 42 பவுன் நகை மற்றும் ரூ.22 ஆயிரம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

வலைவீச்சு

தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான், செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், நாகையில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story