சென்னை சில்க்ஸ் அருகே உள்ள சொகுசு ஓட்டலில் திடீர் தீ விபத்து


சென்னை சில்க்ஸ் அருகே உள்ள சொகுசு ஓட்டலில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 5 Jun 2017 4:15 AM IST (Updated: 5 Jun 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சில்க்ஸ் அருகே உள்ள சொகுசு ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டிடம் தீ விபத்தில் சிக்கி நாசம் அடைந்தது. தீ விபத்தில் சேதமடைந்த 7 மாடி கட்டிடமும் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. கட்டிடம் இடிக்கப்படுவதால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சில கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு சில கடைகள் தள்ளி 5 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் சொகுசு ஓட்டல், துரித உணவக விடுதி, பார் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. பல கடைகள் மூடப்பட்ட போதிலும் இந்த ஓட்டல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

அதிர்ச்சி

இந்த ஓட்டலின் சமையல் அறையில் புகைகளை வெளியேற்றுவதற்கு நவீன புகை போக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று மாலை உணவு சமைத்து கொண்டிருக்கும் போது புகை போக்கியில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீயின் அளவு அதிகமாகி அதிகளவு புகை ஓட்டலில் இருந்து வெளியேறியது.

தகவல் அறிந்து தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வராஜ் மற்றும் எழும்பூர் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயகுமார் தலைமையில் 10–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புகை போக்கியில் பற்றி எரிந்த தீயினை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து நடந்து சில நாட்களே ஆன நிலையில் சொகுசு ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது அந்த பகுதியினரை மீண்டும் அதிர்ச்சிக்கும், பரபரப்புக்கும் உள்ளாக்கியது.


Next Story